“அமெரிக்க ஆர்ப்பாட்டங்கள் நமக்கு ஒரு பாடம்“ சங்கக்கார தெரிவிப்பு

6232

”இனவெறி மற்றும் அநீதிக்கு எதிராக அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எம் அனைவருக்கும் ஒரு படிப்பினை” என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் ஜார்ஜ் ப்லொய்ட்  என்ற கருப்பினத்தவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அவரது இறப்புக்கு நீதி கேட்டு அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிறவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கருப்பினத்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள குமார் சங்கக்கார இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவின் முக்கிய அம்சங்கள் தொகுப்பாக;

”இனவெறி மற்றும் அநீதிக்கு எதிராக அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எம் அனைவருக்கும் ஒரு படிப்பினை. நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அது அமெரிக்கா, இலங்கை அல்லது வேறொரு எந்த நாடாக இருந்தாலும், நமது உணர்வுகளையும் உணர்திறனையும் தீர்மானிக்க வேண்டியது அரசு அல்ல. அது உங்களது மற்றும் என்னுடைய விருப்பமே.”

”நமது அறிவு இரக்கம், பச்சாத்தாபம் மற்றும் புரிதலை அரசு தீர்மானிக்கக்கூடாது.”

”நாங்கள் எங்கள் பிரதிநிதிகளை சொந்த மக்களிலிருந்து நாமே தெரிவு செய்கிறோம். அவர்களின் குணநலன்கள், அரசாங்கத்தில் அவர்களின் செயற்பாடுகளும், இயல்பும் நமது செல்வாக்கு மற்றும் தெரிவால் அமைக்கப்பட்டுள்ளது.”

”எங்கள் தெரிவுகள் அரசின் அணுகுமுறைகள், செயல்கள், கொள்கை மற்றும் சட்டத்தை வழிநடத்துகின்றன. சிறந்த அரசாங்கத்தையும் சிறந்த சமமான ஆட்சியையும் நிறுவ நாம் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்.”

”எங்கள் பலங்களும் பலவீனங்களும் ஒருவருக்கொருவர் நடத்தை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன.”

”மரியாதை மற்றும் புரிதல் ஆகியவற்றின் ஊடான உலக கலாச்சாரத்தை அமைப்பதற்கு, சாதாரண குடிமக்களாகிய நாம் ஒன்றாக இணைந்து அசாதாரணமான மாற்றத்தை அடைய முடியும்.”

”நாம் தைரியமாக இருக்க வேண்டும், நம்பிக்கை வைக்க வேண்டும், அந்த பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்.” என சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.