‘நிறவெறி  கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உள்ளது’ கெய்ல்

87

”நிறவெறி என்பது கால்பந்தில் மட்டுமல்ல அது கிரிக்கெட்டிலும் உள்ளது” மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் ஜார்ஜ் ப்லொய்ட்  என்ற கருப்பினத்தவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அவரது இறப்புக்கு நீதி கேட்டு அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிறவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கருப்பினத்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிறிஸ் கெய்ல், மற்றவர்களின் வாழ்க்கையை போலவே ”கருப்பினத்தவர்களின் வாழ்க்கையும் முக்கியமானது. கருப்பின மக்களை முட்டாள்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார். கருப்பின மக்களும் புத்திசாலிகளாக உள்ளனர்.

”நான் உலகம் முழுவதும் பயணித்துள்ளேன். அங்கு இன ரீதியாக பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்துள்ளேன். இனவெறி என்பது கால்பந்தில் மட்டும் அல்ல, அது கிரிக்கெட்டிலும் உள்ளது” என கிறிஸ் கெய்ல் பதிவிட்டுள்ளார்.