யானை கொலை செய்யப்பட்ட சம்பவம்; ஒருவர் கைது

57

இந்தியாவின் – கேரளா அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை  ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறை பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் மூவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அந்த கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.

ஆனால் சில விஷமிகள், அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது. இதில் யானையின் நாக்கு, வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது.

தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்டனர். கால்நடை வைத்தியர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 27ஆம் திகதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த தகவலை மலப்புரம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த துயர சம்பவம் இந்தியாவில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.