ஜனாதிபதி கோட்டாவிற்கு சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம் ‘காரணம் இதுதான்’

47

இலங்கையின் பதில் சீனத் தூதுவர் ஹூ வை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார். ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அனுப்பி வைத்த கடிதத்தை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டங்கள் சீன ஜனாதிபதியின் பாராட்டை பெற்றுள்ளதென சீன தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

இலங்கையில் வைரசை கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் சீன அரசு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அவை சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நிவாரண உதவிகள் அடங்கிய பட்டியல் பதிற் தூதுவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

நெருக்கடிக்குள்ளான இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஷீக்கும் சீன மக்கள் மற்றும் சீன நிறுவனத்திற்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

சீனா மற்றும் இலங்கை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுவதற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றியுள்ளதென சீனத் தூதுக்குழு குறிப்பிட்டது.

இந்நெருக்கடியை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கு இரு நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் அர்ப்பணிப்பே காரணமாகும் என்றும் தூதுக்குழு குறிப்பிட்டது.

உலகளாவிய தொற்று நோயின்முன் இருநாடுகளும் பரஸ்பரம் பாரிய உதவிகளை செய்துகொண்டது. இவ்வருடத்தில் பெப்ரவரி ஆரம்பத்தில் சீனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தபோது இலங்கை ஒரு தொகை கறுப்பு தேயிலையை சீனாவிற்கு அன்பளிப்பு செய்த காரணம், தேயிலையில் உள்ள நோய் நிவாரண குணாம்சத்தை கருத்திற்கொண்டேயாகும்.

அது மட்டுமன்றி சீனாவில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்காக ஆசி வேண்டி நாடு பூராகவும் பிரித் பாராயணம் ஒலிக்கப்பட்டது. கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்ட பல ஓவியங்களை சீன ஜனாதிபதியின் பாரியார் பென்ங் லியுவான்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அந்நடவடிக்கை அவரின் பாராட்டைப்பெற்றது.

இந்நாட்களில் பீஜிங் நகரத்தின் நிலை பற்றி தெளிவுபடுத்திய தூதுக்குழு, சுமார் நூறு பேரளவில் தொற்றுக்குள்ளாகியிருந்தபோதும், தற்போது இந்நிலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது.

நோயின் ஆரம்பத்தை மிக விரைவாக கண்டு பிடிப்பதற்கு சீன அதிகாரிகள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். வைரஸ் பரவியது நபர்களுக்கிடையிலன்றி, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீனின் மூலமேயாகும். இந்நிலை பற்றி உலக சுகாதார அமைப்பு அவதானத்துடன் இருப்பதாகவும் தூதுக்குழு குறிப்பிட்டது.

இருதரப்பினரும் மேலும் பல துறைசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

சீனாவின் தேயிலை ஏல விற்பனை, உலகின் சிறந்த தேயிலை என பிரசித்தி பெற்றுள்ள இலங்கை தேயிலையை சீனாவில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பாகவும் அவதானத்தை செலுத்தியது.

இலங்கையில் சீன முதலீடு மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான நிதியுதவிகளை அதிகப்படுத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடினர்.