2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை பணத்திற்காக தோற்றது?

53

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற இந்திய அணி சாம்பியனானது.

இந்தப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

”நான் இன்றும் கூறுகின்றேன். நாம் 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை விற்றோம் என்றே கூறுகின்றேன். இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். அதனை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.  நாடு என்ற வகையில் அதனை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெறும் நிலைமையே இருந்தது. அது காட்டிக்கொடுப்பாகும் என்றே நான் கூறுகின்றேன். அந்தப் போட்டியை பணத்திற்காக விற்கப்பட்டது என்றே எனக்கு தெரிகின்றது. தேவையாயின் அது தொடர்பில் விவாதம் செய்ய முடியும். அது தொடர்பில் என்னால் கூற முடியும். அது தொடர்பில் மக்கள் கரிசனை கொண்டுள்ளார். இந்த விடயத்தில் கிரிக்கெட் வீரர்களை நான் தொடர்புபடுத்தமாட்டேன். எனினும் சில குழுக்கள் இந்த விடயத்தில் நிச்சயமாக சம்பந்தப்பட்டு ஆட்டநிர்ணயம் செய்தார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட்டின் நிபுணர்களாக கருதப்படும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, முரளிதரன் மற்றும் டில்ஷான் போன்றவர்கள் விளையாடிய இறுதிப் போட்டியில் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் சர்வதேச வர்ணணையாளருமான ரொஷான் அபேயசிங்க கூறியுள்ளார்.

இந்த சிறந்த வீரர்களின் நன்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இவ்வாறான குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கான உரிய ஆதாரங்களை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ரொஷான் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், சாகச விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதால் அதனுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைக்குமாறும் மஹிந்தானந்த அளுத்கமகேயின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.