சிறைச்சாலை அதிகாரிகள் வருத்தப்பட வேண்டியிருக்கும் ‘பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை’

50

சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குழு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தண்டனை பெற்ற பாதாள உலக குழு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் மற்றும் பாதாள உலக குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணிய சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் மீது தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுவதானது, தங்கள் கடமையை கௌரவமான  முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஊழலற்ற மற்றும் கௌரவமான சேவையை எதிர்பார்ப்பதாக மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மத்தியில்  கொழும்பில்  உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்,  பாதாள உலக குற்றவாளிகளிடம் சிக்காமல் ஊழலற்ற சிறைச்சாலைகள் முறைமையை உருவாக்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் தமது மனசாட்சிக்கு அமைய சேவையாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

“வெலே சுதா அல்லது கஞ்சிபானை இம்ரான் போன்ற திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்படும் பணத்தினை கொண்டு சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் குழந்தைகளின் உணவு மற்றும் கல்வித் தேவைகளுக்கு பயன்படுத்தி மன நிம்மதியை சீர்குலைக்க வேண்டாம்.” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது இதற்காக வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக விஷேட அதிரடிப்படை வீரர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆபத்துக்களை எதிர்நேக்குவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், எதிர்கால சந்ததியினர் வாழ குற்றச் செயல்களற்ற ஒரு சட்டபூர்வமான சூழலை உருவாக்குவதில் சிறை அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கைதிகளை சமமாக நடத்துமாறும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.