பிரிவெனா கல்வியில் தமிழையும் இணைக்க ஆலோசனை; தேரர்களுக்கு ஆசிரியர் தொழில்

53

இலங்கையில் பிரிவெனா மற்றும் பௌத்த அறநெறிப் பாடசாலை கல்வியினை முன்னேற்றுவதற்கு அவசியமான அரச அனுசரணையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை பிரிவெனா விடயதானத்துக்குள் ஏனைய பாடங்களுடன் இணைந்ததாக கற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வாரம் நடைபெறும் பௌத்த ஆலோசனை சபை மூன்றாவது முறையாகவும் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது.

பௌத்த மதத்தலைவர்கள் பலர் பங்கேற்ற இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த ஆலோசனை சபை வழங்கிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட மல்வது பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிரி தேரர், பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கக்கூடிய, ஒழுக்க விழுமியங்கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல் மற்றும் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்காக இரண்டு செயலணிகளை நியமித்தல் தொடர்பாக ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினரின் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அச்செயலணிகள் பயனுள்ள வகையில் எதிர்பார்த்த நோக்கத்தை அடையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் முழு பொறுப்பையும் கையில் எடுத்து, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு மக்களிடத்தில் கிடைக்கும் பாராட்டை பௌத்த ஆலோசனை சபைக்கும் கௌரவத்தை பெற்றுத் தருவதாகவும் மகா சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

பிரிவெனா மற்றும் பௌத்த அறநெறிப் பாடசாலை கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள், தற்போதைய நிலை பற்றியும் பௌத்த ஆலோசனை சபை, ஜனாதிபதிக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் சுட்டிக்காட்டினர்.

பிரிவெனா பாடத்திட்டத்தில் மற்றும் விடயதானத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும் தேரர் தெளிவுபடுத்தினார்.

சிங்கள, பாலி, கலாசார, தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன் தகவல் தொழில்நுட்பத்தையும் பிரிவெனா விடயதானத்தில் சமமான பாடங்களாக கற்றுக்கொடுக்கும் அவசியம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பௌத்த அறநெறிப் பாடசாலை கல்விக்கு, தமது சமூகத்தை மிக அதிகமாக ஈடுபடுத்த வேண்டும் என்றும், பௌத்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்க வேண்டுமென்றும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

ஞாயிறு தினங்களில் மு.ப 6.00 தொடக்கம் பி.ப 2.00 மணிவரை, போயா தினங்களில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை தடுத்து மதப் பின்புலம் தொடர்பாக பிள்ளைகளின் கவனத்தை திருப்புதல் சிறப்பான சமூகத்தை உருவாக்குவதற்கு முன்னெடுக்க வேண்டிய மிக முக்கிய விடயமாக தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள் போதைப்பொருள் உட்பட முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய மகாசங்கத்தினர், பி.ப 5.00 மணிக்கு பிறகு தனியார் வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்தி, பெற்றோர் கவனிப்பில் பிள்ளைகளை இருக்கச் செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

பிரிவெனா செயற்பாடு தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பட்டதாரி தேரர்கள் மற்றும் தர்மச்சார்ய பரீட்சை சித்தி பெற்ற சில் அம்மையார்களை பாடசாலைகளில் பௌத்த மதத்தை போதிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மகா சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

பிரிவெனாவுக்கு தர்மச்சார்ய பணிப்பாளர் பதவியொன்றை உருவாக்குதல், பிரிவெனா பண்பாடுகளை மேம்படுத்தல், பௌத்த அறநெறிப் பாடசாலை உயர் வகுப்புக்களின் பாடப் புத்தகங்களில் உள்ள பௌத்த கலாசாரம், பாலி மற்றும் அபிதர்ம ஆழமான பகுதிகளை நீக்கி மாணவர்கள் அறிநெறி அறிவை பெற்றுக்கொள்வதற்கு வழிகோலும் பகுதிகளை உட்படுத்தல் போன்ற விடயங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.