உண்மை வெளியாகும் ‘சங்கக்கார தெரிவிப்பு’

68

விசாரணைகள் நிறைவுபெற்றதும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்தின் உண்மைத் தன்மை வெளிப்படுமென, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவர், 9 மணித்தியாலங்கள் நீண்ட வாக்குமூலத்தை அளித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

”வாக்குமூலம் அளிக்க நான் வந்திருந்தேன். கிரிக்கெட் தொடர்பில் எமது பொறுப்பு நற்பெயர் காரணமாக சரியானவற்றை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் விசாரணை நிறைவுபெற்றதும் மஹிந்தானந்தவின் கருத்துத் தொடர்பிலான உண்மைத்தன்மையை அறியக்கூடியதாக இருக்குமென நான் நம்புகின்றேன்” என சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை 9 மணிக்கு விசாரணைப் பிரிவில் முன்னிலையான குமார் சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பெறப்பட்டது.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.