உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் ‘போதிய ஆதாரங்கள் இன்றி விசாரணை நிறுத்தம்’

64

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் இடம்பெற்ற விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சின், விசேட விசாரணைக் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

குறித்த விசேட விசாரணைக் பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சின், விசேட விசாரணைக் பிரிவில் இன்று முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன வாக்குமூலம் எதனையும் வழங்காது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் போதிய ஆதாரங்கள் இன்மையால் விசாரணைகள் நிறுத்தப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது.