‘சங்காவும் மஹேலவும் எந்த அடிப்படையில் விசாரிக்கப்பட்டனர்’ மஹிந்தானந்த கேள்வி

59

ஆட்ட நிர்ணய சதியில், கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பில்லை என தான் தௌிவாக கூறியுள்ளபோதிலும், எந்த அடிப்படையில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவை ஆகியோரிடம் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டன என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுத் தொட்ர்பிலான விசாரணைகளை சர்வதேச கிரிக்கட் பேரவையே முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்தக்  குற்றச்சாட்டுத் தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சின், விசேட விசாரணைக் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

எவ்வாறெனினும், குறித்த போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் இடம்பெற்ற விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எந்த அடிப்படையில் விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என கேள்வி எழுப்பியுள்ளார்.

”என்னால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு தொடர்பில் பொலிஸ் பிரிவினர் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். இதன்போது என்னிடம் இருந்த அனைத்து தகவல்களை பெற்றுக் கொடுத்தேன். குறித்த சம்பவத்துடன் கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பில்லை என நான் தௌிவாக கூறினேன். பொலிஸ் பிரிவினர் எந்த அடிப்படையில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவை அழைத்தார்கள் என தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இல்லாத காரணத்தால் விசாரணைகளை நிறுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். என்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் பிரிவிற்கு நான் கதைத்தேன். இந்த சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என பொலிஸ் விசாரணை பிரிவின் தலைவர் எனக்கு தெரிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு போட்டி நிர்ணயம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது. சம்பவம் இடம்பெற்றது 2011இல். இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு தமக்கு எந்த கடப்பாடும் இல்லை என குமார் சங்கக்காரவின் சட்டத்தரணி கூறியுள்ளார். காரணம் இந்த சட்டம் பிழையானது என தற்போதுதான் பொலிஸாருக்கு தெரிகிறது. விசாரணைகள் தவறானது என பொலிஸார் தெரிந்துகொண்ட பின்னர், விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. தகவல்கள் இல்லை என்று கூற முடியாது. தற்போது தெரிவுக்குழுத் தலைவரிடம் மாத்தரமே பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போதைய கிரிக்கெட் நிர்வாக சபையில் இருந்த முன்னாள் செயலாளரிடம் வாக்குமூலம் பெற்றனரா? தலைவரிடம் பெற்றனரா? நிறைவேற்று அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றனரா? அந்த தொடருடன் தொடர்புடைய எவரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. நான் தௌிவாக கூறியிருந்தேன். யார் யாரிடம் தகவல்களை பெறவேண்டும் என்று. ஒருவரிடம் தகவல்களை பெற்றப்பின்பு விசாரணைகளை நிறைவு செய்ய முடியுமா? இந்த சட்டத்திற்கு அமைய பொலிஸ் விசாரணை பிரிவிற்கு விசாரணை செய்ய முடியாது. இந்த விசாரணைகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மேற்கொள்ளப்பட வேண்டும். பொலிஸ் ஊடக பேச்சாளரால் நியாயமற்ற அறிவிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.