மஹிந்தனந்தவின் குற்றச்சாட்டை நிராகரித்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை

52

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையென சர்வதேச கிரிக்கெட் பேரவை  தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதா முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்தக்  குற்றச்சாட்டுத் தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சின், விசேட விசாரணைக் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

எவ்வாறெனினும், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் இடம்பெற்ற விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு, கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்தேகம் கொள்வதற்கு காரணமே இல்லை என, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவவையின் ஊழல் தடுப்புப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் பேரவவையின் ஒருமைப்பாடு பிரிவு ஆராய்ந்துள்ளதாகவும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித ஆதாரமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை அல்லது கிரிக்கெட் பேரவவையின் ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்க தகுதியான காரணங்களும் இல்லை என அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அப்போதைய இலங்கை விளையாட்டு அமைச்சரால் கிரிக்கெட் பேரவவைக்கு எந்தவொரு கடிதமும் வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை எனவும், அப்போதைய கிரிக்கெட் பேரவவையின் சிரேஷ்ட அதிகாரிகளும் அவ்வாறான எவ்வித கடிதங்களும் கிடைக்கப்பெறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கிடைத்திருந்தால் அவை விசாரணைகளுக்கு வழி வகுத்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 2011 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியின் நேர்மைத்தன்மையை சந்தேகிக்க எமக்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம், இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குமானால், நாம் தற்போதுள்ள நிலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆய்வு செய்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியோ அல்லது வேறு ஏதேனும் போட்டியோ ஆட்ட நிர்ணயத்திற்கு உட்பட்டது என்பதற்கு யாரிடமாவது ஆதாரம் இருக்குமானால், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருமைப்பாட்டு குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (thinakaran.lk)