ஜனாதிபதி அமைச்சுப் பொறுப்பை வகிக்க முடியுமா? பதில் இதோ!

88

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்திற்கு அமைய, ஜனாதிபதி ஒருவர் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்க முடியுமா இல்லையா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், இதுத் தொடர்பில் இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.

“அரசியலமைபின் 19ஆவது திருத்தத்தில், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியை தம்வசம் வைத்திருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குத்தான் அமைச்சுப் பதவியை வழங்க முடியும்.

”அதேவேளை, 19ஆவது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதி ஒருமுறை மட்டும் அமைச்சுப் பதவிகளை வைத்திருப்பதற்கும் அதே திருத்தத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டும் இருந்தது.

”அதாவது 19வது திருத்தம் அமுலுக்கு வரும்போது ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவர், அந்தப் பதவிக் காலத்தில் மட்டும் மூன்று அமைச்சுக்களைத் தன்வசம் வைத்திருக்க முடியும் என 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் ஆகியவைவே அந்த மூன்று அமைச்சுக்களுமாகும்.

”ஆனால், அந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்குப் பிறகு, எந்தவொரு அமைச்சுக்களையும் ஜனாதிபதியொருவர் தன்வசம் வைத்திருக்க முடியாது என, அரசியலமைப்பின் 19வது திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.

“அந்த வகையில், தற்போது பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கின்றமையானது அரசியலமைப்பு மீறலாகும்” என்று,  சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பதற்கு, அரசியலமைப்பில் இடமுள்ளது” என நீதியமைச்சரும், சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பின் 4ஆவது சரத்துக்கு இணங்க, நாட்டின் பாதுகாப்பு – ஜனாதிபதியினால் பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதியிடம்தான் பாதுகாப்பு அமைச்சு இருக்க வேண்டும்”

அதேவேளை, “ஜனாதிபதி விரும்பினாலும் கூட, பாதுகாப்பு அமைச்சை வேறு எவருக்கும் வழங்க முடியாது” எனவும் நீதியமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார். (bbc tamil)