கொழும்பில் இருந்து வீடு சென்றவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

1220

மூன்று தினங்களுக்கு மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி, வெளி மாகாணங்களுக்கு சென்றுள்ள நபர்கள் மீண்டும் வரும்போது, விசேட அடையாளப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கிய வகையில் விசேட நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்படும்.

இதன்போது கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் மக்கள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் வெளியேறி இருப்பதாக தெரியவந்தால் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

கொழும்பு நகரில் இருந்து வெளியிடங்களில், வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதிக்காது சிலர் செயற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் இவர்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைவாக, விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் என்பன பரிசோதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்கள் சென்று தங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார். (news.lk)