ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி முதியோரிடமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

69

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசி முதியோரிடையே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கொரோனாவை தடுக்க சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவை சில நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனிகா நிறுவனம் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியும் கொரோனாவை தடுப்பதில் சக்தி வாய்ந்ததாக இருப்பதாக பரிசோதனை பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி முதியோரிடமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுவின் ஆய்வாளர் வைத்தியர் மகேஷி ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தடுப்பூசி முதியோரிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் முதியோர் அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு குறித்த தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.