கஞ்சாவை பயிர் செய்து நாட்டின் கடனை செலுத்த முடியும் “டயானா ஆலோசனை“

380

இலங்கைக்குள் கஞ்சாவை மருந்து என்ற அடிப்படையில் பயிர் செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக கடன் சுமையிலிருந்து விடுப்பட முடியும் என தான் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவிக்கின்றார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்றைய தினம் (20) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பல்வேறு வகையான ஓளடத செய்கைகளை பயிரிட்டு, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

தற்போது தடை செய்யப்பட்ட கஞ்சாவை, ஓளடத பயிராக அங்கீகரித்து, அதனூடாக அந்நிய செலாவணியை பெருமளவில் கொண்டு வர அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இலங்கையிலிருந்து இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்ட இறப்பர், தெங்கு, தேயிலை போன்ற பிரதான ஏற்றுமதி செய்கைகளுக்கு மேலதிகமாக, ஓளடத பயிர் செய்கைகளையும் செய்ய முன்வர வேண்டும் என அவர் கூறுகின்றார்.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கஞ்சா ஏற்றுமதியின் ஊடாக பாரியளவு வருமானம் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு வங்கியின் தரவுகளுக்கு அமைய, உலகில் கஞ்சா வர்த்தகம் அடுத்த தசாப்தத்தில் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, 2027ஆம் ஆண்டாகும் போது 140 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு கிடைக்கும் வருமானத்தில் 57 பில்லியன் அமெரிக்க டொலர் சட்ட ரீதியாக கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கஞ்சா ஏற்றுமதியில் அதிகளவிலான தொகை, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என டயானா கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். (trueceylon.lk)