“போர்க் குற்றக் குரல்கள் சபையில் ஒலிக்கின்றன” கஜேந்திரனின் கருத்தால் சபையில் அமைதியின்மை

59

அரச படையினர் யுத்தக் குற்றங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இன்று தெரிவித்த விடயமானது நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இந்த கூற்றை வன்மையாகக் கண்டித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா எழுந்து தனது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், போர்க் குற்றக் குரல்கள் சபையில் எழுவதாக கஜேந்திரகுமார் தெரிவித்ததைத் தொடர்ந்து மேலும் சர்ச்சை வலுத்தது.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலம் அரச படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இந்த கூற்றை வன்மையாகக் கண்டித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா எழுந்து தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன்போது, குறுக்கீடு செய்து கருத்து வெளியிட்ட பீல்ட் மார்சல் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதியாகிய தாம் போர்க் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக கஜேந்திரக்குமார் தெரிவித்த கருத்தை அரச தரப்பு தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து சபையில் உள்ள அத்தனை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எழுந்து கஜேந்திரகுமாரின் கருத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தொடர் உரைக்கு இடையூறும் விளைவித்துவந்தனர்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதியமைச்சர் நிமல் லன்ஸா, அரச படைகள் போர்க் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் கூறிய வசனங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த சந்தர்ப்பத்தில் சபையில் பெரும் கூச்சல் ஏற்பட்டதால் சபைக்குத் தலைமைதாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, கூச்சலில் ஈடுபடும் உறுப்பினர்களின் சட்டப்பிரச்சினைத் தொடர்பில் அவதானம் செலுத்தப்போவது இல்லையென வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு கூச்சலுக்கு மத்தியில் உரையை முடித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குத் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும், பொருளாதாரம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்த உரையின்பின் சபையில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவதாரமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதாகவே தான் கண்டதாக குற்றஞ்சாட்டினார்.(truenews.lk)