200 ஊடகவியலாளர்களை கைது செய்ய அரசு திட்டம்?

59

அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாகவும், 200ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை கைது செய்வது தொடர்பிலான தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய இடம்பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாள் நாள் விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இளம் தலைவராக மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக செயற்பட்ட ஒருவர், இந்தப் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டுச்சென்ற ஒருவர், எனினும் இன்று என்ன நடக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.

அண்மைய நாட்களில் இது அதிகரித்துள்ளது. இது கவலையான விடயம். 200ற்கும் மேற்பட்டவர்களை கைது செய்வதற்கான பட்டியல் ஒன்று பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு செயற்பட வேண்டாமென நான் கேட்டுகொள்கின்றேன். அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் மனித உரிமைகளுக்காக முன்னின்று செயற்பட்டார். எனினும் அவர் பிரதமராக இருக்கும் அரசாங்கத்தில் இவ்வாறான விடயம் இடம்பெறக் கூடாது.

ஆகவே சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டிற்கு இடமளிக்குமாறு நான் கேட்கின்றேன். அரசியல் அமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த சுதந்திரத்தை அவ்வாறே வழங்கி, அதனை எதிர்கொண்டு செயற்படுவதற்கு தயாராகுங்கள். அவ்வாறு செயற்படாத அரசாங்கங்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.