இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“

63

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொலிஸ் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 45 முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25 வெற்றிகரமான சுற்றிவளைப்புகளில் 30 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களில் 10 பேர் பொலிஸார் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, ஆறு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பிரதேச செயலகங்களில் பணியாற்றும், பிரதேச செயலாளர்கள் உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆணைக்குழுவிற்கு இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 1,425 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகளில், விசாரணைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,066 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் தொடர்பில் 237 முறைப்பாடுகளும், ஊழல் தொடர்பில்748 முறைப்பாடுகளும், சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமைத் தொடர்பில் 35 முறைப்பாடுகள், சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் 46 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த காலப்பகுதியில் 301 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் அவசியமில்லை எனத் தெரிவித்த ஆணைக்குழு தீர்மானித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், 156 முறைப்பாடுகள், ஆணைக்குழு சட்டத்துடன் தொடர்புடையது அல்லவென்பதால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அவைகள் ஏனைய நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள 145 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இன்மை, மற்றும் தெளிவற்ற தன்மை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தகவல்களுக்கு அமைய, இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களின் ஆணைக்குழுவின் உத்தரவுகளுக்கு அமைய 623 முறைப்பாடுகள் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைக்கு முன்னதாக 301 வழக்குகளும், ஆரம்பக்கட்ட விசாரணைக்கு பின்னராக 322 வழக்குகளும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றங்களில் 36 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

நீதவான் நீதிமன்றத்தில் 05 வழக்குகளையும், உயர் நீதிமன்றத்தில் 31 வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளன.

ஓகஸ்ட் 31ஆம் திகதி பதிவுகளுக்கு அமைய, 87 வழக்குகள் நீதவான் நீதிமன்றத்திலும், 189 வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், இரு வழக்குகள் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.