”மாமா ஐ லவ் யூ” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

93

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் கதாநாயகி நிதி அகர்வாலை, மாமா ஐ லவ் யூ… எனச் சொல்லச் சொல்லி வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் – ஈஸ்வரன். படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசை – தமன். ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது கதாநாயகி நிதி அகர்வால் மேடையில் பேச வந்தபோது, இயக்குநர் சுசீந்திரன் அவர் அருகில் நின்றுகொண்டு பேசிய விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை வரவழைத்துள்ளது.

நிதி அகர்வால் பேசியபோது அவர் அருகில் நின்றுகொண்டிருந்த சுசீந்திரன், சிம்பு மாமா பத்தி பேசு முதல்ல… என்றார். நிதி அதைத் தவிர மற்ற விடயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என்னைப் பத்தியெல்லாம் பேசாதே. அதைக் கேட்கும் மனநிலையில் ரசிகர்கள் இல்லை. அவரைப் (சிம்பு) பத்தி பேசு என்றார் உடனே நிதி, சிம்பு பற்றி பேச ஆரம்பிக்கும்போது, சிம்பு மாமா ஐ லவ் யூ… முதலில் சொல் என்றார் சுசீந்திரன். இதைக் கேட்டு நிதி சிரித்தார். மீண்டும் சுசீந்திரன் சிம்பு மாமா… ஐ லவ் யூ… என்றார். இதன்பிறகு மீண்டும் சிம்புவைப் பற்றி பேசினார் நிதி அகர்வால்.

இதன் காணொளி, சமூகவலைத்தளங்களில் வெளியானது. கதாநாயகியைப் பேச விடாமல் இடைமறித்ததாக பலரும் சுசீந்திரனை விமர்சனம் செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்தச் சர்ச்சை பற்றி சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பாடல் வெளியீட்டு விழாவில் ஜாலியாகப் பேசிய விஷயம். படத்தில் சிம்புவை விரட்டி வி”ரட்டி நிதி காதல் செய்வது போல காட்சிகள் உள்ளன; ஐ லவ் யூ மாமா… ஐ லவ் யூ மாமா.. என்பது போல அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். சிம்பு விலகி விலகி போவார். படத்தின் கதாபாத்திரத்தை முன்வைத்து தான் அப்படிச் சொல்ல சொன்னேன். ஆனால், அதை நிறைய பேர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான விளக்கமாக இதைச் சொல்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.