டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

60

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவுகள் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளமையால் அந்தக் கணக்கை முடக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம் ஆதரவாளர்களைத் தூண்டும் விதத்தில் பேசிய காணொளிகளை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், சுமார் 12 மணி நேரத்திற்கு ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை முடக்கியிருந்தது.

குறித்த பதிவுகள் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து, ட்விட்டர் நிறுவனம் அவற்றை நீக்கியது.

எனினும், ”டொனால்ட் ட்ரம்பின் கணக்கின் அண்மைய ட்வீட்களையும் அவற்றைச் சுற்றியுள்ள சூழலையும் நெருக்கமாக பகுப்பாய்வு செய்த பின்னர் – குறிப்பாக அவை ட்விட்டரிலும் மற்றும் வெளியேயும் வன்முறையை மேலும் தூண்டும் அபாயத்தின் காரணமாக கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளோம்.” என ட்விட்டர் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் விதிகளை மீறிய இந்த நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய விளைவுகளை தாம் கடந்த புதன்கிழமை தெளிவுபடுத்தியதாக ட்விட்டரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இந்த ட்விட்டர் கணக்கு எங்கள் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனவும், வன்முறையை தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது என்பதையும் பல வருடங்களாக பின் தெளிவுபடுத்தி வருவதாகவும், எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் நாம் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம்.” எனவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்பது தொடர்பாகவும், வெற்றிபெற்றமைக்கான சான்றுகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் வொசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்று வந்தது.

இதனைக் குழப்பும் முயற்சியாக ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு கட்டடத்திற்குள் நுழைய முயன்றனர்.

இதனைக் தடுக்க பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசி ஆதரவாளர்களை கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.