22 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

70

இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், அவிஷ்க பெர்ணான்டோ, ரமேஷ் மெண்டிஸ், ரோஷேன் சில்வா, நுவன் பிரதீப், லக்ஷான் சந்தகன் ஆகியோர் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தினம் காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய 22 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் மெத்தியூஸைத் தவிர ஏனைய ஐவரும் தென்னாபிரிக்காவில் உபாதைக்குள்ளான வீரர்களுக்கு பதிலாக அணியில் இணைத்துக் கொள்ளப்படுவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிரான டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டிருந்த அஞ்சலோ மெத்தியூஸ், லங்கா பிறீமியர் லீக் அரை இறுதிப் போட்டியின் போது உபாதைக்குள்ளானதால் தென்னாபிரிக்காவுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெறவில்லை.

அத்துடன், 32 வயதான ரொஷேன் சில்வா, இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இலங்கை அணியில் விளையாடவுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ரமேஷ் மெண்டிஸும் முதல் தடவையாக டெஸ்ட் அணிக்கு களமிறக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், 3 வருட இடைவெளியின் பின்னர் டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சுழல் பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமல், கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகியோர் உபாதைக்கினர்.

போட்டிக்கு முன்னர் உபாதைக்குள்ளான சுரங்க லக்மால் இன்னும் பூரண குணமடையவில்லை. இந்த ஐவருக்குப் பதிலாகவே மாற்று வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்தது.

திமுத் கருணாரத்ன அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.