”இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது” HRW அறிக்கை

89

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (HRW), உலக அறிக்கை 2021இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதோடு, சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது படையினரின் கெடுபிடிகள் மற்றும்  கண்காணிப்புகள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சியின் கீழ் சிறுபான்மை  சமூகங்களான முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள்  பாகுபாடு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறை சுதந்திரத்தை குறைக்கும் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட  சுயாதீன நிறுவனங்களை பலவீனப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து உண்மை மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி, கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.

இதனையடுத்து, முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை நன்மைகளை விரைவாக மாற்றியமைத்தது. இது சிறுபான்மையினரை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றியுள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் கூட தற்போது இராணுவப் பங்கால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிரேஷ்ட பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியை போலவே, 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்கள் என மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம், ஜெனரல் ஷவேந்திர சில்வா நீதிக்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிவித்த விடயத்தையும்  மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்துள்ளதோடு, சட்டத்தரணிகள்  மற்றும் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கருதி, ராஜபக்ச நிர்வாகம் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட பின்னர் முஸ்லிம்கள் வேண்டுமென்றே வைரஸை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம் வணிகங்களை புறக்கணிக்க சமூக ஊடங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் சர்வதேச ஏற்றுக்கொள்ளலுக்கு புறம்பாக கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அரசாங்கம் தகனம் செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும், மனித உரிமை மீறல்களின் மோசமான பழைய நாட்களுக்கு, இலங்கை மீண்டும் திரும்புவதைத் தடுக்கவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பெப்ரவரி-மார்ச் அமர்வில் இலங்கை தொடர்பான சாத்தியமான நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில்  சர்வதேச அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என மீனாட்சி கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார்.