இரவில் தைப் பொங்கலை கொண்டாடிய மட்டக்களப்பு ஆதிவாசிகள் (Photos)

60

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசிகள் தைப் பொங்கல் தினத்தன்று இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை வழிபட்டு பொங்கலை கொண்டாடியுள்ளனர்.

குறித்த ஆதிவாசிகள் பொங்கல் தினத்தினை முன்னிட்டு தைப்பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசை செய்வது வழக்கம்.

குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் உள்ள வாராகி அம்மன் ஆலயம் மற்றும் நாககன்னி அம்மன் ஆலயம் என்பவற்றில் ஆதிவாசிகள் தங்களது வேடுவ தெய்வத்தினை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

ஆதிவாசிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து, துணிகளை காணிக்கையாக வேடுவ தெய்வத்திற்கு படைத்து வழிபட்டனர்.

”இதன்போது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசைகள் இடம்பெறும் போது தெய்வங்கள் ஆண்டவனிடம் சென்று எங்களுக்கு ஆசி வேண்டி வருவதுடன், நாங்கள் பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து வழிபடுவோம். அப்போது அந்த பெட்டியில் உள்ள பூவை மனக்கும் போது பூசகரின் உடலில் தெய்வம் வரும்” என மட்டக்களப்பு மாவட்ட ஆதிவாசிகளின் தலைவர் ந.வேலாயுதம் தெரிவித்தார்.

பொங்கலுக்கு பதிலாக காட்டு பொன்னாவரைப் பூ வைத்து தமது வேடுவ தெய்வத்தை வழிபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றனர்.