கொரோனா தடுப்பூசியை தேசிய இரத்த வங்கியில் சேமிக்க நடவடிக்கை

52

இலங்கையின் தேசிய இரத்த மத்தியஸ்தானம், அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளப்படவுள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பகமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை 70 மைனஸ் டிகிரி வெப்பநிலையில் சேமிக்கும் திறனை, தேசிய இரத்த மத்தியஸ்தானம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த வங்கி தற்போது தேவையான வெப்பநிலையின் கீழ் சுமார் 500,000 தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் திறனைக் கொண்டுள்ளதாக, மத்தியஸ்தானத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சு, ஏற்கனவே தேசிய இரத்த தேசிய இரத்த மத்தியஸ்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் தடுப்பூசிகளை சேமிக்கத் தயாராக இருப்பதாக தாம் சுகாதார அமைச்சிற்கு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், தடுப்பூசிகள் அல்லது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள நாடுகள் குறித்து இதுவரை எந்த விபரங்களும் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.