”தமிழர்கள் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முயற்சியில் அடக்குமுறையை அனுபவிக்கின்றனர்”

63

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்பியுள்ள, பிரத்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், இலங்கையின் சர்வதேச பொறுப்புக்கூறலில் வலுவான குரலாக பிரித்தானிய அரசாங்கம் இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொற்று நோய் அச்சுறுத்தலில் தமிழ் சமூகம் ஆற்றிய பெரும் பங்களிப்புக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலக வாழ் தமிழர்கள் நேற்றைய தினம் தைத்திருநாளை கொண்டாடிய நிலையில் பிரித்தானிய அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், பிரத்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் தனது வாழ்த்துச் செய்தியில் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான இலங்கையின் தீர்மானம் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான போராட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவெனவும், இலங்கையின் தற்போதைய நிலைமை பலருக்கு மிகுந்த கவலை அளிக்கும் என்பதை தான் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”சர்வதேச பொறுப்புக்கூறலில் பிரித்தானிய தொடர்ந்து வழிநடத்த வேண்டும் மற்றும் வலுவான குரலாகவும் இருக்க வேண்டும். தொழிற்கட்சி நீதியையும் மனித உரிமைகளையும் கோருவதற்காக தமிழ் சமூகத்துடன் தொடர்ந்து செயற்படும்.” எனவும் பிரத்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும், பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில், மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொாண்டு வருவதற்கான உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்க புதுப்பிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக, கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் வெளியிட்டுள்ள தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், சேம் டெரி வெளியிட்டுள்ள தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமையைக் கண்டித்துள்ளார்.

மேலும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முயற்சிகளில் அடக்குமுறையை தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், பொப் பிளக்மேன் விடுத்ததுள்ள வாழ்த்துச் செய்தியில், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமையை கண்டித்துள்ளார்.

“இதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. இது ஒரு அமைதியான நினைவுச்சின்னம். இது அனைவரையும் நினைவுகூருவதைத் தவிர வேறொன்றுமில்லை.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நினைவுச்சின்னம் சிதைந்தபின் அதை மீள அமைப்பது கடினம், எனினும் அந்த நினைவுச்சின்னத்தை மீளமைக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பது விடுப்பது சரியான விடயமென தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வரலாற்றில், தமிழ் மக்கள் பெரும்பாலான விடயங்களை இழந்துள்ளதாகவும், எனினும் அவர்கள் நெகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் செயற்படுவதை தான் நன்கு அறிவதாகவும், கன்சர்வேடிவ் கட்சியின் அன்றுவ் ரொசின்டல் வெளியிட்டுள்ள தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பார்கள் எனவும், அதற்கு தான் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilguardian.com/content/uk-politicians-praise-tamil-community-thai-pongal-wishes