11 கோடியை கடந்த கொரோனா தொற்று; மேலுமொரு புதிய வகை வைரஸ் பரவல்

51

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  11 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.48 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதோடு, இதுவரை 24.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.27 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,400ற்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா ஆகியன முதல் 5 இடங்களில் உள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

B.1.525 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் வகையை ஒத்தது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வேல்ஸில் இருவருக்கும், இங்கிலாந்தில் 36 பேருக்கும் இந்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டென்மார்க், நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.