26 வயது இளைஞர் கொலை; 22 வயது பெண் கைது, பேஸ்புக் தொடர்பால் விபரீதம்

71

சமூகத்தில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்களின் மூலமாக பேஸ்புக் இன்று மாறியுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு குற்றங்களை செய்வதற்கும், திட்டமிடல்களை மேற்கொள்வதற்கும் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில், பேஸ்புக் மூலம் ஏற்பட்ட தொடர்பு ஒரு இளைஞரின் உயிரை பறித்துள்ள விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சமூக வலைத்தள தொடர்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நாளாந் ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

”ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சீதுவ பொலிஸில் கடந்த 8ஆம் திதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது. இதுத் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களின் பின்னர் கடத்தப்பட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

”சீதுவ பொலிஸாரின் விசாரணைகளில் பல உண்மைகள் வெளிவந்தன. குறித்த நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 26 வயதுடைய உயிரிழந்த நபர் தனக்குச் சொந்தமான, மாத்தறை நகரில் அமைந்துள்ள வியாபார ஸ்தலத்தை வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார். இந்த விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டில் வாடகைக்கு வியாபார ஸ்தலத்தைப் பெற்றுக்கொண்டுள்ள நபர் இந்த கொலையை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

”இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 22 வயது பெண், உயிரிழந்த நபருடன் பேஸ்புக்கில் தொடர்புகொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். இதன்போது சந்திக்க வந்த இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய நால்வரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர்.

”அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனார். சமூகத்தில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்களின் மூலமாக பேஸ்புக் இன்று மாறியுள்ளது. குற்றவாளிகளுக்கு குற்றங்களை செய்வதற்கும், திட்டமிடல்களை மேற்கொள்வதற்கும் பேஸ்புக் இன்று பயன்படுகிறது.” அவர் குறிப்பிட்டுள்ளார்.