பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் உள்நோக்கம் என்ன? உண்மை அம்பலம்!

51

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதே, பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடுமென சர்வதேச அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் தொடர் ஆரம்பமாகும் முக்கியமான தருணத்தில் பாகிஸ்தானிய பிரதமரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி, மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது அமர்வில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கடந்த 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்த 40/1 அறிக்கையின் அடிப்படையில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான இரண்டு நாட்கள் விஜயம் குறித்து, மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பிராந்திய வலையமைப்பான, மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

தகனத்திற்குப் பதிலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பில் இலங்கை பிரதமர் வெளியிட்ட அறிவிப்பை, அது அவரது தனிப்பட்ட கருத்து என இலங்கை அரசாங்கம் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் கான், முஸ்லிம்களின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் தனது வருகையின் போது இலங்கை முஸ்லீம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நாட்டில் உள்ள தமிழ் சிறுபான்மையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அந்த அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

பிரதமரின் வருகை இரு நாடுகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தாலும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைப் பற்றிய பொதுவான மனித உரிமைப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பது அவசியம் எனவும், மக்களுடைய கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்புக்கான உரிமை ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள பிராந்தியத்தில் பொதுவான பிரச்சினையாக காணப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேசியவாதம் மற்றும் மத தீவிரவாதத்தின் அதிகரிப்பு சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுதலுக்கு வழிவகுப்பதாகவும், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் குறிப்பாக அரச மற்றும் அரசு சாரா அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்களால் குறிவைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்துள்ளதாகவும், குறிப்பாக இராணுவம் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வழிநடத்துவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து குடிமக்களின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்படும் அதேவேளையில், உண்மையான தெற்காசிய நட்பைக் கொண்டாட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களை கேட்டுக்கொள்வதாக, மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக கோரியுள்ளது.