இலங்கைத் தமிழர்களின் அமைதியான வாழ்வை இந்தியா உறுதிப்படுத்தும்

47

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்துடன் “தனிப்பட்ட உறவு” இருப்பதாக கூறியுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையில் உள்ள தமிழர்கள் அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் சேலத்தில் இடம்பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களின் மண்ணுக்கு வருவது குறித்து பெருமிதம் அடைகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கினார் என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங் அது தமிழ்நாட்டை கௌரவப்படுத்தும் நடவடிக்கையில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

1974 இல் காங்கிரஸ் அரசாங்கம் கச்சதீவை இலங்கையிடம் கையளித்தவேளை வாஜ்பாய் அதனை கண்டித்தார் என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கு எதிராக வாஜ்பாய் நீதிமன்றம் சென்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் மகள் புரட்சி தலைவி அம்மாவே முதலாவது வாஜ்பாய் அரசாங்கத்தை முழுமனதோடு ஆதரித்தவர் என்பதை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் போன்று இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டுடன் விசேட உறவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் தமிழ் அகதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மோடி தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2015 இல் பிரதமரான பின்னர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும், யாழ்ப்பாணம் சென்ற ஒரேயொரு பிரதமர் அவர் எனவும், உள்நாட்டு யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த 27,000 சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் வீடுகளை வழங்கியுள்ளோம் எனவும் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.