புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களுடன் ‘டிக் டோக்’ இளைஞர் கைது

36

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் படங்களுடன் ‘டிக் டோக்’ செயலி ஊடாக காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் காணொளிகளையும், படங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர் எனவும், எனினும் தற்போது அவர் ஹட்டனில் வசிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் தொலைபேசியை சோதனையிட்டபோது, ​​பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பல செய்திகள் கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைக் கண்காணிக்க பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ‘சைபர் ரோந்து’ என்ற விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவது, பகிர்வது அல்லது சமூக ஊடகங்களில் அனுப்புவதைத் தவிர்க்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.