ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்; இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு

81

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை சார்பாக செயற்பட 18 நாடுகள் உறுதியளித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், இலங்கையின் கடந்தகால பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகள் உயர் மட்ட பிரிவு மற்றும் வேறு நிகழ்வுகளின் போது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதற்கமைய 18 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, இலங்கைத் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகளின் முயற்சியைத் தடுக்க அந்தந்த நாடுகளின் ஆதரவைக் கோருவதற்கு இலங்கை ஒரு தீவிரமான சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

தீர்மானத்தின் பூச்சிய வரைபு தற்போது வெளியாகியுள்ளது. இந்த உள்ளடக்கம் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருப்பதாக இலங்கை நம்புகிறது.

2019 இல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் குறித்த மேம்பாட்டை கண்காணிப்பதோடு, மனித உரிமைகள் பேரவையில் 49ஆவது அமர்வில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை முன்வைக்கவும் பூச்சிய வரைபில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகள் பேரவையின், 51ஆவது அமர்வில் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடாக கருதப்படும் இந்தியா இலங்கைக்கு எதிராகவே செயற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் கூட்டாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இருந்து விலகுவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை செயற்படுத்த சீன நிறுவனத்திற்கு வாய்ப்பளிப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கும் சீன நிறுவனம், திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, சர்வதேச விலைமனுக் கோரல் முறையூடாகவே இந்த திட்டத்தை கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்தியா இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலங்கையின் கடந்தகால பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய, அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிளின்கன், இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு இதுவரை பொறுப்புக்கூறப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து மேலும் விசாரணைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிரியா மற்றும் வட கொரியாவில் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்புக்கூறாமை மற்றும் தென் சூடான் விவகாரங்கள் குறித்து மேலும் விசாரணைகள் அவசியம் என்ற அடிப்படையில், இந்த விடயங்களை வலியுறுத்தும் தீர்மானங்களை வரவேற்பதாக இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிளின்கன் குறிப்பிட்டுள்ளார்.