இலங்கை மீது பல குற்றச்சாட்டுகள், அனைத்தையும் நிராகரித்த அரசாங்கம்

84

இலங்கையில் இதற்கு முன்னர் இடம்பெற்றதைப் போன்ற உரிமை மீறல்கள் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான சமிக்ஞைகள் காணப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் எச்சரித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து சுமார் 12 வருடங்களுக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தவறிவிடப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்று வருகிறது.

இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் தயாரித்திருந்ததோடு, இலங்கை நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற அமர்வில் அந்த அறிக்கை குறித்து அவர் உரையாற்றினார்.

இது இலங்கையுடனான பேரவையின் ஈடுபாட்டிற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும். எனது முன்னைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல மோதல் நிறைவடைந்து சுமார் 12 வருடங்களுக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தவறிவிட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டில் பேரவையில் இலங்கை சார்பில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதிலும், தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறிதல் அல்லது பொறுப்புக்கூறல் செயல்முறைகளைத் தொடரத் தவறவிட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து சமூகங்களிலும் போரில் பேரழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், இந்நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான விதி மீறல்களுக்கு வழிவகுத்த அமைப்புகள், கட்டமைப்புகள், கொள்கைகள் அவ்வாறே இன்னமும் பேணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டவர்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், அண்மை காலங்களில் அவர்களில் இருப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சிவில் சமூகத்தினர் மற்றும் சுயாதீன ஊடகங்களுக்கான செயற்பாட்டு சுதந்திரம் கடந்த காலத்தில் ஓரளவுக்கு இருந்தபோதும் இப்போது அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பிற முக்கிய அமைப்புகளின் சுயாதீனத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் செயற்பாடுகள் வேகமாக இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் அரச உயர் மட்டத்தினரால் பாகுபாட்டுடன் கையாளப்படுவதாகவும், கொரோனா தொற்று நோயால் உயிரிழப்பவர்களை கட்டாயமாகத் தகனம் செய்யும் அரசின் கொள்கை சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடையே வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்ற விதி மீறல்கள் முறைகள் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படுவதாகவும், அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிந்து அதன் நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்குத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டமை, முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தடை விதிக்குமாறு தனது அறிக்கையினூடாக உறுப்பு நாடுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பயணத் தடை விதிப்பதற்கும் அவர் தனது அறிக்கையில் யோசனை முன்வைத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையால். நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை இலங்கை அரசாங்கம் மூடிவிட்டுள்ளதாகவும், இந்நிலையில் இலங்கையில் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்வதற்கான புதிய வழிகளை ஆராயுமாறு அனைத்து தரப்பினருக்கும் தான் அழைப்பு விடுப்பதாகவும் மிச்செல் பச்லெட் கூறியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துப் பாதுகாப்பதற்கான பொறுப்பையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் , பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க தமது அலுவலகம் தயாராக உள்ளதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையர்களை இலக்கு வைத்து தடை விதித்தல், பயணத் தடைகளை விதித்தலால் இறையாண்மை உள்ள நாட்டின் உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது.

உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என இலங்கை அரசாங்கத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் அறிவித்துள்ளது.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை திறந்த மற்றும் செயற்றிறன்மிகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தவறுகளுடன் சமப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
றுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.

இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் இலங்கையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சபை உட்பட ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என இலங்கை அரசாங்கத்தின் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.