ஈஸ்டர் தாக்குதல்: ”எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை” ரணில்

76

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த, ஜனாதிபதி ஆணைக்குழு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதனையும் முன்வைக்கவில்லை என, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், விசாரணை ஆணைக்குழு அதன் முழு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட, ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் குறித்த அறிக்கையின் நகலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியோன் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய மெய்நிகர் செவ்வியில், குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதி அறிக்கை தனக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின், அரசியல் பொறுப்புக்கூறலுக்கான அளவுகோல்களையோ அல்லது குற்றவியல் பொறுப்புக்கான அளவுகோல்களையோ அவதானித்தால் தளர்வான அணுகுமுறை தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு அணுகுமுறையை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பிய ரணில் விக்ரமசிங்க, தான் நிச்சயமாக தீவிரவாதத்தை சகித்துக் கொள்ளவில்லை எனவும், அதனை தான் செய்யப்போவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், பொலிஸ் மதத் தீவிரவாத பிரிவை உருவாக்கியதாகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சடட வரைபை உருவாக்கியதாகவும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, தீவிரவாதம் மீதான ஒடுக்குமுறையை அமுல்படுத்துமாறு தான் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு, ஜனாதிபதி சிறிசேன அழைக்கவில்லை எனவும், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபச்சவையும் அழைக்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் கூட்டப்படவில்லை எனவும், அமைச்சர்கள் மட்ட கூட்டம் மாத்திரமே இடம்பெற்றதாகவும், எவ்வாறெனினும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட, ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் பிரதமராக இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த விக்ரமசிங்கவின் தளர்வான அணுகுமுறை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறிய அப்போதைய அரசாங்கத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமான அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட, ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.