காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கும் ஜனாதிபதி கோட்டா

76

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆயிரத்து 200 நாட்களைக் கடந்து தங்களது போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட நிலையிலும் காணாமல் போன தங்களுடைய உறவினர்களுக்கு என்ன ஆனது? என்ற கேள்விக்கு விடை தேடி அவர்களது உறவினர்கள் நீண்ட காலப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அவர்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும் ஜயநாத் கொலம்பகே தி ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அவர்களை நேரடியாக சந்தித்து அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துக்களுக்கு அப்பால் அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளை தெரிந்து கொள்ள ஜனாதிபதி விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் இடம்பெறும் பட்சத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தற்போதைய ஜனாதிபதி சந்திக்கின்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.