சார்பாக 21 நாடுகள்: எதிராக 15 நாடுகள், இலங்கை சார்பில் புதிய பரிந்துரைகள்

62

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்நின்று நடத்தும் நாடுகளின் பிரேர​ணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இதனை முன்வைக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன் நின்று நடத்தும் நாடுகளான பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகியன புதிய பிரேரணையை முன்வைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான பிரதி ஆணையாளர் நடா அல் நசீவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திருத்தம் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கரிசனைகளை வெளியிட்டு சில மாற்றங்களை கோரிய பின்னர் இறுதி ஆவணம் மூன்று வாரங்களுக்கு மேல் தாமதமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல மாதிரிகளை பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விவகாரத்தை கையாளும் போது சிரியா, மியன்மார் வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்பில தற்போது நடைமுறையில் உள்ள பொறிமுறைகள் குறித்தோ அல்லது முற்றிலும் புதிய வடிவம் குறித்தோ பரிசிலீக்க முடியும் எனவும், மனித உரிமைகளுக்கன பிரதி ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் என ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதுவர் டானியல் குரென்பீல்ட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் அதற்கான கால அட்டவனையொன்றை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஓரங்கட்டப்படுவது அதிகளவிற்கு இடம்பெறுவது குறித்தும் சிவில்சமூகம் செயற்படுவதற்கான தளம் குறைவடைவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது, துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்கான நம்பகமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இராணுவ அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவது குறித்தும் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் சமீபத்தில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீடுகளிற்கான அலுவலகம் ஆகியவற்றின் சுதந்திரத்திற்கும் வலுவாக பயணிப்பதற்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

சிவில் சமூகத்திற்கான தளம் குறைவது குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம், கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலை முன்னெடுத்தவர்கள் தற்போது பழிவாங்கப்படுவது குறித்து அச்சமடைந்துள்ளனர் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நல்லிணக்கத்திற்கு கடந்தகால விடயங்களை கையாள்வது முக்கியம் என ஜேர்மனி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ள விடயத்தையும் ஜேர்மனி வரவேற்றுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து தென்னாசிய மற்றும் பொது நலவாயத்திற்கான பிரித்தானிய அமைச்சர் அஹமட் பிரபு கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்த பிரித்தானியாவின் கரிசனையை அவர் வெளியிட்டுள்ளார்.

சிவில் அரசாங்கம் இராணுவமயப்படுத்தப்படுதல் மற்றும் அரசாங்கத்தின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னையை ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனித உரிமை பேரவை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட 21 நாடுகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வௌியிட்டுள்ளதுடன், பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகள் இலங்கையின் செயற்பாடுகளைக் கண்டித்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய சில செயற்பாடுகளை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது கண்டித்துள்ளன.

Video-

http://webtv.un.org/meetings-events/human-rights-council/watch/id-high-commissioner-report-on-sri-lanka-contd-10th-meeting-46th-regular-session-human-rights-council/6235189268001/?term=