காலை உணவுக்கான செலவு, சர்ச்சையில் சிக்கிய பிரதமர்

71

மக்கள் வரி பணத்தை குடும்பத்தினரின் காலை உணவுக்காக செலவு செய்து வருவதாக பின்லாந்து பிரதமர் மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான கேசரந்தாவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் காலை உணவுகளுக்காக மாதத்திற்கு சுமார் 300 யூரோக்களை திரும்பக் கோருவதாக கடந்த வாரம் தகவல் வெளியான நிலையில், பிரதமர் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி பிரதமரின் காலை உணவுக்கு சட்டவிரோதமாக மானியம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிப்பதாக பின்லாந்து பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் பூதாகரமாக வெடித்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

”பிரதமராக, நான் எந்த விதமான நன்மையையும் கேட்கவில்லை அல்லது அதை தீர்மானிப்பதில் ஈடுபடவில்லை” என பிரதமர் மரின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிரதமருக்கு தனது குடும்ப உணவுகளுக்காக பணம் மீள செலுத்தப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் சட்டத்தின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த சட்டத்தின் சொற்கள் இதை அனுமதிப்பதாக தெரியவில்லை.” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மரின் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், விசாரணையை வரவேற்பதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் போது அதன் நன்மைகளை கோருவதை தான் நிறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.