ஸ்புட்னிக் V தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானதா, சர்வதேசம் என்ன சொல்கிறது?

77

ஸ்புட்னிக்-5 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களில் முதலாவது டோஸில் மாத்திரம், திருப்தியடைய முடியும் என ரஷ்யாவின் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளதாக, இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஆகவே நிறுவனம் அளித்த உத்தரவாதத்திற்கு அமைய, ஒரு டோஸை மாத்திரம் திருப்தியடைய தீர்மானித்ததாகவும், எனினும் தற்போது வரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-5 தடுப்பூசிகளை ஒரு முறை மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதில் திருப்தியடைய முடியும் என குறித்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் ஆய்வகம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் இரண்டு தடுப்பூசிகளில் முதலாம் கட்டமாக வழங்கப்படும் தடுப்பூசியை ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் எமக்கு அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே இது எம்மால் தீர்மானிக்கப்படும் விடயமல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-05 மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை கண்டியில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, கொரோனா தடுப்பூசியை முதல் முறை  மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் பத்திரம் ஒன்று தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களில் அதிகாரிகளால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த பத்திரத்தில் அதிலுள்ள முதலாவது தடுப்பூசி மாத்திரம் என்ற நிபந்தனையை அழித்துவிட்டு இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுத்தர வேண்டும் என பொது மக்கள் எழுதியதால் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

ஸ்புட்னிக்-5 முதலாவது தடுப்பூசியை  மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதாக மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நேற்றும் கண்டியில் இடம்பெற்றது.

இந்த சர்ச்சை நீள்கின்ற நிலையில், நேற்றைய தினம், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.

நிபுணத்துவ வைத்திய ஆலோசனைக்கு அமையவே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  நாட்டின் நிலைமையை அவதானித்தே ஒரு தடுப்பூசியேனும் போதுமானது என தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சத்திரசிகிச்சையொன்றுக்கு சென்றாலும் கையொப்பமிட வேண்டுமெனவும், அவ்வாறே தகவல்கள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளைக் கொண்ட ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கே அனுமதி வழங்கியுள்ளதாக தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

ஸ்புட்னிக்-5 முதலாம் தடுப்பூசிக்கு 6.5 மில்லியனும் இரண்டாம் தடுப்பூசிக்கு 6.5 மில்லியனும் செலுத்தி அதனைக் கோரியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

வேறு தடுப்பூசிகளைப் போன்றல்லாமல் அதன் இரண்டு தடுப்பூசிகளும் வித்தியாசமானவை என அதிகார சபை தெரிவிக்கின்றது.

இதேவேளை, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5  கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரம் போதுமான பாதுகாப்பை வழங்குவதாக, அந்த நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு காரணங்களுக்காக, ஸ்புட்னிக்-5 இரண்டாவது டோஸைத் தவிர்த்த ரஷ்ய மக்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஸ்பூட்னிக்-5 முதல் டோஸின் பின்னர், 79.4 சதவிகிதம் பயனுள்ளதாக காணப்பட்டதை சுகாதார அமைச்சு மேற்கோளிட்டுள்ளது. மேலும், இரண்டு டோஸ்களைப் பெற்ற பின்னர்  91.6 சதவிகிதம் பயனுள்ளதாக காணப்பட்டதையும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும்,  ஸ்புட்னிக்-5 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை வழங்கும் செயற்பாட்டை ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகள் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.