எம்.வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மன்னிப்புக் கோரியது

62

எம்.வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அந்த கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக இலங்கையின் கடற்சூழலுக்கும், மக்களது வாழ்தாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையானது வருத்தமளிப்பதாகவும், எக்ஸ்பிரஸ் பெடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாமுவெல் யோஸ்கொவிட்ஸ் தெரிவித்துள்ளார்.

செனல் நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய செவ்வியில் சாமுவெல் யோஸ்கொவிட்ஸ் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

”ஒரு கொள்கலனில் மாத்திரமே கசிவு ஏற்பட்டது. அனைத்து கொள்கலன்களிலும் கசிவு ஏற்படவில்லை. இதுதான் தீப்பற்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம். எனினும் ஏன் தீப்பற்றியது என்பதை தெளிவாக கூற இயலாது. கடலில் பல விபத்துகள் இடம்பெறுகின்றன.

”சில சந்தர்பங்களில் துறைமுகங்கள் உதவி செய்யும். சில சமயங்களில் அவர்களால் இயலாது. இந்த சம்பவம் குறித்து பெரிதும் வருத்தமடைந்திருப்பதோடு, மன்னிப்புக் கோருகிறோம். இந்த அனர்த்தம் காரணமாக இலங்கையின் கடற்சூழலுக்கும், மக்களது வாழ்தாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையானது வருத்தமளிக்கிறது. தற்போதைய நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக சர்வதேச சரக்குக் கப்பல் உரிமை மாசுபாடு குறித்த சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

”அத்துடன் இந்த கப்பலால் கரையொதுங்கிய கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை சுத்திகரிப்பதற்காக தேவையான கருவிகளை இலங்கைக்கு வழங்கி, இலங்கை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.