ஓய்வுபெற்ற தாதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

52

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் வேண்டுகோளுக்கமைய நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற நிலையில், பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இலங்கையில் சுமார் 34 ஆயிரம் தாதியர்கள் தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள குறுகிய மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு இதன்போது தெரிவித்த பிரதமர், தாதியர்களின் சேவை காலத்தை நீடிப்பது குறித்த செயற்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும் வினவினார்.

தாதியர்களின் சேவை காலத்தை 63 ஆண்டுகள் வரை நீடிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முனசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார சேவையில் ஈடுபடும் அனைவரும் இதுவரை சிறப்பாக சேவையாற்றி வருவதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவினார்.

சுகாதார துறையில் அனைவருக்கும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்ப உறுப்பினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், சுகாதார அமைச்சருக்கு தெரிவித்தார்.

தற்போது தாதியர் பட்டத்தை வழங்குவதற்கான பணி சட்ட வரைவுகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வரைவை விரைவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்த கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

பிரதமர், ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட பின்னர் இதுவரை அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்த முறுத்தெட்டுவே தேரர், அக்கொடுப்பனவை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து பொதுத் தீர்மானம் மேற்கொண்டு எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தில் அதனை நிறைவேற்ற முடியும் என பிரதமர் தெரிவித்தார்.