ஜப்பானிடம் இருந்து 6 இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி கிடைக்காது?

79

அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்த ஜப்பான் மறுத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் இந்த விடயத்தை உறுதிப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளதாக, கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, ​​பொருத்தமான நேரத்தில், ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 30 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஜப்பான் கோவெக்ஸ் திட்டம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் தந்துதவும் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

தமது தலைமையகம் மேலதிக விபரங்களை மீளாய்வு செய்வதாகவும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட விடயங்கள் குறித்து கருத்து வெளியிட விரும்பவில்லை என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கடந்த 9ஆம் திகதி  ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.