கொழும்பில் இருந்து செல்லும் கப்பலில் எண்ணெய் கசிவு

86

இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருக்கும் சரக்குக் கப்பலான எம்.வி டெவோனில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பயணித்தைத் தொடரும் போர்த்துகேய கப்பலில் இருந்தே எண்ணெய் கசிந்து கடலில் கலப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொள்கலன் கப்பலான எம்.வி டெவோனில் இருந்து 10 கிலோ லீற்றர் அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தென்கிழக்கில் 450 கடல்மைல் தொலைவில் இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதால், கப்பல் தனது இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வேளைக்குள் ஹால்டியா துறைமுகத்திற்கு குறித்த சரக்குக் கப்பல் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணெய் கசிவு குறித்த தகவல்களை புதன்கிழமை பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையிடம், கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்தது.

மேலதிக விசாரணையில் சுமார் 120 கிலோ லீற்றர் கொள்ளளவு கொண்ட எம்.வி.டெவன் கப்பலின் இடது புற எரிபொருள் தாங்கியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிசலின் விளைவாக 10 கிலோ லீற்றர் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. எனினும் மீதமுள்ள எண்ணெய் மற்றொரு தாங்கிக்கு மாற்றப்பட்டு, கசிவு தடுக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 தொன் பொருட்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கடலோர காவல்படையில் விமானங்களும் கப்பல்களும் உதவிக்குச் செல்லத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (zeenews.india.com/tamil)