பொலிஸாரின் காவலில் இருந்த விதுஷன் உயிரிழப்பு, சடலத்தை தோண்ட உத்தரவு

99

மட்டக்களப்பில் பொலிஸார் தடுத்து வைத்திருந்த போது, மரணித்த சந்திரன் விதுஷனின் உடலை மீண்டும் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த இளைஞனின் உடல் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் கடந்த 2ஆம் திகதி இரவு ஸ்ரீலங்கா காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்ட 21 வயதான சந்திரன் விதுஷன் 3ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பைகளை விழுங்கியதால் அவை நெஞ்சுப் பகுதியில் வெடித்து நுரையீரல் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி விசாரணை இடம்பெற்ற போது, தனது மகனின் உடலை மீண்டும் உடல் கூற்று பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு இளைஞனின் தாய் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்றைய தினம் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைய, உயிரிழந்த இளைஞனின் உடலை எதிர்வரும் திங்கட்கிழமை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனை செய்ய நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.